தாலியின் தத்துவம்
தொடக்கத்தில் மனிதன் மலையிலேதான் வாழ்ந்து வந்தான். மலை கரைந்து காடாகி, காடு சமவெளியாகி, பயிரிடக் கூடிய நிலமாகியது. இப்படிக் குறிஞ்சி, முல்லை, மருதம் என்று முன்று நிலமாகியது. மலையில் வாழும் ஆண்மகன் திருமணம் செய்ய வேண்டுமென்றால் அந்தப் பெண்ணைப் பாதுகாக்கக்கூடிய உடல் வலிவு இருக்கிறதா என்று கண்டுபிடிக்க ஒருமுறை வைத்தார்கள். கொடிய விலங்கு ஒன்றை வென்று அதனுடைய 'பல்' ஒன்றைக் காண்பித்து சான்றிதழ் வாங்க வேண்டும். அவ்வாறு கொண்டு வந்து காண்பித்த பல்லிலே ஒரு கயிற்றைக் கட்டி, பெண்ணின் கழுத்தில் தாலியாகக் கட்டுவது என்றாகியது. இப்போது புலிப் பல் தேடும் காலம் போய் புலிப்பல்லைப் போலவே இரண்டு நாக்கு வைத்து தங்கத்தால் செய்த ஒரு சின்னத்தைக் கட்டலாயினர். இதைத் தான் இப்பொழுது தாலி என வழங்குகிறோம்.
வடநாட்டுத் தாலி எப்படி என்றால் யுத்தங்கள் அதிகமாக இருந்ததால் கலவரத்தில் பெண்களைச் சூறையாடும் வெறி இருந்தது. பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வசதியாகத் தாலியின் உள்ளே 'விஷம்' வைத்து வாய்க்கு எட்டும் தூரத்தில் தொங்க விட்டார்கள். பிற்காலத்தில் கணவன் மனைவிக்குள் பிணக்கு சச்சரவு வரும் போது சாப்பிட ஆரம்பித்ததால், விஷம் நிறுத்தப் பட்டு, அரக்கு வைக்கப்படுகிறது.
இப்படி சடங்குகளை அலசிப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு கால கட்டத்தில் அவசியமானதென்று தெரிய வருகிறது. தற்காலத்திற்கு தேவையில்லையெனில் அவற்றை தள்ளிவிட்டு மனித சமுதாயம் முன்னேற வேண்டும். அதற்கு விரோத மனப்பான்மை எழாத விதத்திலே சமுதாயத்தோடு ஒத்தும் கலந்தும் இளைஞர்கள் செயலாற்ற வேண்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
ஜனவரி 1, 2012 - வாழ்க்கை வள உயர்வுப் படிகள் சிறப்புப் பட்டறை @ VMSKY
No comments:
Post a Comment