From: Krishna
நம்பிக்கையும் வலிமையும்1. எவன் ஒருவனுக்குக் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.
2. தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கும். நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாதபோதுதான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்தவுடனேயே அழிவு வருகிறது.
3. நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து, ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்குக் கதி மோட்சமில்லை.
4. ஆன்மாவால் சாதிக்க இயலாத காரியம் என்று எதவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, சமையத்திற்கு மிக பெரிய முரண்பட்ட கருத்தாகும். பாவம் என்பது ஒன்று உண்டு என்றால், அது "நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள்" என்று சொல்வது ஒன்றுதான்.
5. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுகிறாய்.
6. சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன் - உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெறமுயற்சி செய்ததையும், அப்படி எதுவும் வாரமால் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்து வந்தவையாகத்தான் இருக்கும்.
7. "இல்லை" என்று ஒருபோதும் சொல்லாதே. "என்னால் இயலாது" என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஓப்பிடும்போது, காலமும் இடமும்கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.
8. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே, நீங்களா பாவிகள்! அப்படி மனிதனை அழைப்பதுதான் பாவம். அது மனித இயல்பின்மீதே சுமத்தப்படும் பழிச்சொல்லாகும். ஓ சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள், சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.
9. போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே. பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகிவிடாது. எனவே இந்தத் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒருபோதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தொல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.
10. பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். மக்களுக்குக், ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப் பற்றிப் போதிப்பாயாக.
11. உபநிஷதங்களில் இருந்து வெடிகுண்டைப் போலக் கிளன்பி, அறியாமைக் குவியல்களின் மீது வெடிகுண்டைப் போன்று வெடிக்கும் சொல் ஒன்றை நீ காண்பாயானால், அந்தச் சொல் அஞ்சாமைஎன்பது தான்.
12. நீ கவனித்துப் பார்த்தால், உபநிஷதங்களைத் தவிர வேறு எதையும் ஒருபோதும் நான் மேற்கோளாக எடுத்துச் சொன்னதில்லை என்பது புலப்படும். மேலும், உபநிஷதங்களின் 'வலிமை' என்னும் அந்த ஒரே ஒரு கருத்தைத்தான் நான் எடுத்தாண்டிருக்கிறேன். வேத வேதாந்தங்களின் சாரமெல்லாம் அந்த ஒரு சொல்லிலேதான் அடங்கியிருக்கிறது.
13. எனது இளம் நண்பர்களே, வலிமை உடையவர்களாக இருங்கள். இதுவே நான் உங்களுக்கு வழங்கும் அறிவுரை. கீதை படிப்பதைவிடக் கால்பந்தின் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்குக் அருகில் இருப்பீர்கள். இவை தைரியமான வார்த்தைகள். ஆனால், உங்களை நேசிக்கின்ற காரணத்தால் இவற்றை நான் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். செருப்பு எங்கே கடிக்கிறது என்பதை நான் அறிவேன். ஒரு சிறிது அனுபவமும் பெற்றிருக்கிறேன். உங்கள் தோள்கள், சதைகளின் சற்றுக் கூடுதலான வலிமையால், கீதையை இன்னமும் சற்றுத் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள்.
14. ஒவ்வொரு மனிதன் முன்பும் இந்த ஒரு கேள்வியை நான் வைக்கிறேன் - நீ வலிமையுடையவனாக இருக்கிறாயா? நீ வலிமையை உணர்கிறாயா? ஏனென்றால் உண்மை ஒன்றுதான் வலிமை தருகிறது என்பதை நான் உணர்த்தி இருக்கிறேன். உலகத்தின் நோய்க்கு வலிமை ஒன்றுதான் சரியான மருந்து.
15. மிக பெரிய உண்மை இது - வலிமைதான் வாழ்வு; பலவீனமே மரணம். வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, நிரந்தரமான வளவாழ்வு, அமரத்துவம் ஆகும். பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணமேதான்!
No comments:
Post a Comment