 | வேதாத்திரிய சிந்தனைகள் : - "நானே நாம்" :- நான் என்ற தத்துவமே நாமா யுள்ளோம் நாடுகள் பலவற்றில் வாழுகின்றோம் ஊன் உருவம் வரையில் அறிவெல்லை யாக்கி ஒருவருக் கொருவர் இன, தேச, சாதி, தான், தனது எனும் பேதம் கொண்டு வாழ்வில் தனித்தியங்கித் துன்புற்றோம், ஆழ்ந்தா ராய்ந்து, ஆண்மநிலை யறிந்ததனால், பேதமற்ற அரூபசக்தி நிலையில் நாம் ஏகனானோம். - மகரிஷி இருப்புநிலை என்ற பரம்பொருளும் அதன் எழுச்சி நிலையாகிய விண்ணும் இணைந்தே எல்லா தோற்றங்களும், எல்லா உயிரினங்களும், மனிதன் உட்பட என்பதை நாம் உணராத காரணத்தால், தான், தனது என்று அறிவு குறுகிய நிலையில் எல்லை கட்டி இயங்குவதால் சாதி, மதம், மொழி, தேசம் என்ற நிலையில் நம்மைத் தனிப்படுத்தி வாழ்க்கையில் துன்பப் படுகின்றோம். நமது பெற்றோர், அவர்கள் பெற்றோர், அவர்கள் பெற்றோர்... என்று பின்னோக்கி ஆராய்ந்து பார்த்தால் நாம் அனைவரும் ஒருவரின் பிள்ளைகளே என்ற உண்மை தெரியவரும். அவருக்கு மூலம் இரண்டு விலங்கினங்கள் ஆகும். விலங்கினங்கள் ஐந்து அறிவு. அவைகளுக்கு முன் நான்கு, மூன்று, இரண்டு, ஓர் அறிவு தாவரம்வரை செல்லும். அவைகளுக்கு மூலம் பஞ்ச பூதங்கள். இதில் முதல் தத்துவம் விண். விண்ணுக்கு மூலம் சுத்தவெளி எனும் பரம்பொருள். இந்த நிலையில் நாம் நம்மை நோக்கிப் பார்த்தோமானால் நம் எல்லோருக்கும் மூலம் ஒன்றே. இப்போது நாம் அனைவரும் ஒருவரே என்ற உண்மை அறிகிறோம். உருவ நிலையில் நாம் வேறுவேறு. அருவ நிலையில் நாம் ஒன்றே. அதுவே இறைநிலை. வாழ்க வளமுடன். |
No comments:
Post a Comment