வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Wednesday, 7 August 2013

'அவங்களுக்கு என்னப்பா... கை நிறையச் சம்பளம்; போக,...




Ramesh Kumar S
'அவங்களுக்கு என்னப்பா... கை நிறையச் சம்பளம்; போக, வர வாகன வசதி; சனி, ஞாயிறு ரெண்டு நாள் லீவு! கொடுத்து வைச்சவங்க!' என்று, ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்களையும் யுவதிகளையும் குறித்து எல்லோருமே ஒரு காலத்தில் இப்படித்தான் சொல்லிப் பொருமிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், அடுத்தடுத்த காலகட்டங்களில், ஐ.டி. நிறுவனத்தைப் பற்றி மெள்ள மெள்ள அறிந்துகொண்டார்கள், மக்கள். குறிப்பாக, அந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் வேலை முறையையும், பணிச் சுமையையும், அதனால் அவர்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்தையும் பற்றித் தெளிவுறத் தெரிந்துகொண்டார்கள்.

படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை உத்தரவாதமாகிவிட, படித்த கையோடு வேலைக்குச் செல்வது என்பதும், அதுவும் சொந்த ஊரையும் உறவுகளையும் விட்டுவிட்டு, வெளியூர் சென்று வேலை செய்வது என்பதும் சிரமமும் வலியும் கூடிய காரியம்தான்.

ஹாஸ்டல், உணவு, தனிமை என ஏகப்பட்ட பிரச்னைகளால் அயர்ச்சியும், அலுப்பும் இன்றைய ஐ.டி. இளைஞர்கள் பலருக்கும் எப்போதும் நிரந்தரமாகிப் போகிறது என்பது கொடுமைதான்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, இவற்றில் இருந்து இளைஞர்களை மீளச் செய்வதற்கும், அவர்களை உற்சாகப்படுத்தி உத்வேகத்துடன் செயல்பட வைப்பதற்கும், சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று, அங்கே வேலை செய்பவர்களுக்கு மனவளக்கலைப் பயிற்சியை அளிக்க முடிவு செய்தது.

அதன்படி, உலக சமுதாய சேவா சங்கத்தின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக, அந்த நிறுவன ஊழியர்களுக்கு மனவளக் கலைப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

''இளைஞர்கள்கிட்ட இயல்பாவே இருக்கிற ஆர்வம், எதையும் தெரிஞ்சுக்கணும்கற நினைப்பு, எல்லாத்துக்குள்ளேயும் உடனே தன்னைப் பொருத்திக்கற பக்குவம்னு நிறைய விஷயங்களை அவங்ககிட்ட கவனிச்சுப் பார்த்தேன். அதை இன்னும் சரியானபடி டியூன் பண்ணிக்கிறதுக்கும், இன்னும் வளர்த்துக்கறதுக்கும் அவங்களுக்கு மனவளக் கலைப் பயிற்சியைக் கத்துக் கொடுக்க ஆரம்பிச்சோம். முதல் மூணு நாலு மாசங்கள்லேயே நல்ல ரிசல்ட் தெரிஞ்சுது என்பதோடு, அந்தப் பலன்களை அவங்களே அனுபவபூர்வமா உணர்ந்தாங்கன்றதுதான் இங்கே சந்தோஷம்!'' என்று பூரிப்புடன் சொல்கிறார், சென்னை நகர் மண்டல தலைவர் பேராசிரியர் வி.சி.சுந்தரம்.

இந்த நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணிபுரியும் பூர்ணிமாவிடம் பேசினோம்.

''எனக்குச் சொந்த ஊர் திருச்சி. அப்பா அம்மால்லாம் அங்கேதான் இருக்காங்க. படிச்சு முடிச்ச கையோட, எனக்கு வேலை கிடைச்சுது. சென்னையின் ஆரம்பப் பகுதியான தாம்பரத்துல ஒரு ஹாஸ்டல்ல தங்கி, மவுன்ட்ரோட்ல இருக்கிற ஆபீசுக்கு தினமும் ரயில்ல வர்றதே மிகப் பெரிய அவஸ்தையான விஷயமா இருந்துது. ரயில் பயணம், கசகசப்பு, வெயில்னு எல்லாமா சேர்ந்து தாக்கி, என்னைச் சீக்கிரமே டயர்டாக்கிடும். எப்பவும் சோர்வாவே இருப்பேன். போதாக்குறைக்கு அப்பாவும் அம்மாவும் பக்கத்துல இல்லாத ஏக்கம் வேற வாட்டிச்சு. என்னடா செய்றதுன்னு பல்லைக் கடிச்சு, சகலத்தையும் தாங்கிட்டிருக்கும்போதுதான், ஆபீஸ்ல மனவளக்கலைப் பயிற்சியைக் கத்துக் கொடுக்கப் போறதா கேள்விப்பட்டேன்.

அந்த அறிவிப்பும், அடுத்தடுத்த நாள் ஆயத்தங்களும் என்னை மெள்ள மெள்ள உற்சாகப்படுத்திச்சுன்னுதான் சொல்லணும்!' '- சொல்லும்போதே பூர்ணிமாவின் குரலில் அத்தனை உற்சாகம்!

Source: சக்தி விகடன்[20/08/2013] அன்பே தவம்! - 9
வளமுடன் வாழலாம்..! by ஆர்.கே.பாலா


No comments:

Post a Comment